Sunday 23 July 2017

இக்கரைக்கு அக்கரை பச்சை


அயோத்தியை ராமபிரானின் முன்னோரான மாந்தாதா மன்னன் ஆட்சி செய்த காலத்தில், சவுபரி என்னும் வயதான மகரிஷி ஒருவர் இருந்தார். தண்ணீருக்குள் தவம் செய்யும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஒருநாள் தண்ணீருக்குள் இருக்கும் போது ஒரு ஆண் மீனும், பெண் மீனும் மகிழ்ச்சியுடன் விளையாடுவதைக் கண்டார். 

அவரது மனதில், 'நானும் ஏன் இல்லறத்தில் இணையக்கூடாது?' என்ற எண்ணம் ஏற்பட்டது. மாந்தாதாவின் அரண்மனை நோக்கிப் புறப்பட்டார். 

“மன்னா! இல்லற வாழ்வில் ஈடுபட விரும்புகிறேன். தங்களுக்கு ஐம்பது மகள்கள் இருக்கிறார்களே.... அவர்களில் ஒருத்தியை எனக்கு 
திருமணம் செய்து கொடுங்கள்,” என்று கேட்டார்.

மாந்தாதா திகைத்தான். 'ஒரு முதியவருக்கு எப்படி பெண் கொடுக்க முடியும்' என்று யோசித்தான். 

இருந்தாலும் ரிஷியின் சாபத்திற்கு ஆளாகலாம் என்பதால் ஒரு தந்திரம் செய்தான்.

“தாங்கள் வயதானவராக இருப்பதால், என் பெண்களிடமே அவர்களது விருப்பத்தைக் கேளுங்கள். யார் சம்மதம் தெரிவிக்கிறாளோ, அவளை மணம் முடித்து தருகிறேன்,” என்றான்.

வயதானவரை எந்தப் பெண்ணும் மணக்க சம்மதிக்க மாட்டாள் என்பது மாந்தாதாவின் எண்ணம். உடனே ரிஷி, தன் தவசக்தியால் தன்னை ஒரு அழகிய இளைஞனாக மாற்றிக் கொண்டு அந்தப்புரம் சென்றார். கம்பீரமாக இளைஞன் ஒருவன் உள்ளே வருவதைக் கண்ட ராஜகுமாரிகள் அவனது அழகில் மனதைப் பறி கொடுத்தனர். எல்லாருமே அவனை மணந்து கொள்ளப்போவதாக தந்தையிடம் கூறினர். வேறு வழியின்றி ஐம்பது பெண்களையும் சவுபரிக்கே மணம் செய்து வைத்தான் மாந்தாதா.

ஐம்பது மனைவிகளுக்கும் தேவலோக தச்சரான விஸ்வகர்மாவை உதவிக்கு அழைத்து ஐம்பது மாளிகைகள் கட்ட ஏற்பாடு செய்தார் சவுபரி. தன்னை ஐம்பது இளைஞர்களாக உருமாற்றிக் கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். ஐம்பது மனைவியரும் ஆளுக்கு பத்து குழந்தைகளைப் பெற்றனர். குழந்தைகள் ஆளானதும் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். பேரன், பேத்திகள் பிறக்கவே குடும்பம் மேலும் பெரிதானது. அதற்கேற்ப தொல்லைகளும் அதிகரித்தன. சமாளிக்க முடியாமல் திணறினார். இதற்கெல்லாம் காரணத்தை யோசித்தார்.

'தவ வாழ்வில் ஈடுபட்ட போது மீன்களைக் கண்டு கணப்பொழுதில் எடுத்த விபரீத முடிவால் தானே இந்நிலைக்கு ஆளானேன்' என்று வருந்தினார். குடும்பப் பொறுப்பை இளையவர்களிடம் விட்டு விட்டு மீண்டும் தவவாழ்வுக்கே போய்விட்டார். 

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள். குடும்பத்தில் இருப்பவன் 'சாமியார்களுக்கு தான் நிம்மதி' என்கிறான். சாமியாரோ குடும்ப வாழ்வு இனிமையாக இருக்குமோ என்று நினைக்கிறார். இரண்டிலும் பிரச்னை உண்டு. மனிதனாகப் பிறந்து விட்டால் அவற்றை சமாளித்து தான் ஆக வேண்டும்.

No comments:

Post a Comment