Friday 21 July 2017

குபேர வாழ்வு தரும் ஐந்து முக சிவன்


திருவானைக்காவல் வடக்கு வீதியில் ராஜராஜேஸ்வரர் கோவில் எனப்படும் பழமையான சிவாலயம் ஒன்று இருந்தது. பல காலமாகப் பூஜை, வழிபாடு இல்லாததால் அக்கோவில் ஆள் நடமாட்டம் இல்லாமல் புதர் மண்டிக் கிடந்தது. இதைக் கேள்விப்பட்டு, காஞ்சி மகாபெரியவர் 1943ல் இங்கு வந்தார். புதர் சூழ்ந்த இடத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்ற அவர், உள்ளே இரண்டு சிவன் கோவில்கள் இருப்பதைக் கண்டார். 

அதில் ஒரு கோவிலில் நான்கு திசைக்கும் நான்கு வாசல்களும், மேலே ஒரு வாசலுமாக ஐந்து வாசல்கள் அமைந்திருந்தன. அங்கிருந்த சிவலிங்கம் வழக்கமான வடிவில் காணப்படவில்லை. நான்கு திசைக்கும் நான்கு முகங்களும், அதன் மேலே ஆகாயத்தை நோக்கிய ஊர்த்துவ முகமும் கொண்டிருந்தது. 

ஸ்ரீ ருத்ர மகன்யாசம் என்ற மந்திரத்தில், சிவபெருமானுக்குரிய தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என்னும் ஐந்து முகங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் கிழக்கு நோக்கியது தத்புருஷம் என்ற முகம். இது சாம வேதத்தைக் குறிக்கும். தெற்கிலுள்ள அகோரம் என்ற முகம் அதர்வண வேதமாகும். மேற்கி நோக்கிய சத்யோஜாத முகம் ரிக் வேதமாகும். வடக்கு முகமான வாமதேவ முகம் யஜூர் வேதமாகும். ஐந்தாவது முகமான ஈசானம் அரூபமாக அதாவது கண்ணுக்குப் புலப்படாததாக இருக்கும். இந்த அமைப்பில், ஐந்து முகம் கொண்ட சிவலிங்கமும், அதைச் சுற்றிய ஐந்து வாசல்களும் கொண்ட கோவில் ஒன்று நேபாள தலைநகர் காட்மாண்டில் உள்ளது. 

ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சிவன், பசுபதீஸ்வரர் என போற்றப்படுகிறார். அதைப் போலவே தமிழகத்திலும் இப்படி ஒரு கோவில் இருப்பதும், அது மகாபெரியவர் மூலமாக வெளிப்பட்டதும் கண்டு எல்லாரும் அதிசயித்தனர்.

புனிதமும், பழமையும் மிக்க இந்த கோவில்களில் திருப்பணி நிறைவேற்றிய காஞ்சிப் பெரியவர், 13.6.1943ல் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி  வைத்தார். லட்சுமி கடாட்சம் தரும் குபேரனால் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில் தலபுராணம் கூறுகிறது. இவரைத் தரிசிப்போருக்கு குபேரனைப் போல செல்வச் செழிப்பும், ராஜ வாழ்க்கையும் அமையும் என்பது ஐதீகம். 

வேறு எங்கும் தரிசிக்க முடியாத இந்த சிவலிங்கத்தையும், கோவிலையும் தரிசிக்கும் வாய்ப்பளித்த பெருமை காஞ்சிப் பெரியவரையே சேரும். 

No comments:

Post a Comment