Tuesday, 11 July 2017

இருப்பது போதும்


ஜைதீஷவ்ய முனிவர் சிவலோகம் வந்தார். அப்போது பார்வதி சிவனிடம் ''பெருமானே! பொருள் என்றால் என்ன? சக்தி என்றால் என்ன?'' என கேட்டது முனிவர் காதில் விழுந்தது.

அதற்கு சிவன், ''நான் தான் பொருள். நீ அதில் அடங்கியுள்ள சக்தி. எனவே நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை,'' என்றார்.

இதை முனிவர் மறுத்தார். 

''பொருள் தான் உயர்ந்தது. சக்தி என்பது அதனுள் அடங்கியிருக்கும் ஒன்றே!'' என்றார். இதுகேட்ட பார்வதிக்கு கோபம். 

''என்னை இவர் அவமானப்படுத்துகிறாரே!'' என்று சிவனிடம் கேட்க, ''பார்வதி! அவரிடம் கோபம் கொள்ளாதே. அவர் ஆசைகளைத் துறந்த ஞானி,'' என்றார் சிவன்.

''ஆசை இல்லாத ஒருவர் இருக்க முடியுமா?'' என்று பார்வதி ஆச்சரியப்படவே, அவளை முனிவரின் ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார் சிவன். அங்கே முனிவர் கிழிந்த துணிகளை சேர்த்து, தனக்கு ஆடையாக தைத்துக் கொண்டிருந்தார் முனிவர். அவரிடம், ''ஏதாவது வரம் கேளுங்கள்?'' என்றார் சிவன்.

''எதுவும் தேவையில்லை. இருப்பதே போதும். தங்கள் அருளைக் கேட்பது கூட ஒரு வகை ஆசை தான்!'' 

என்றார் முனிவர். இதுகேட்ட பார்வதி அவருக்கு அருள் செய்து கிளம்பினாள்.

No comments:

Post a Comment