Friday 21 July 2017

திருச்சாழல் என்னும் ‘திரு’ விளையாட்டு


சாழல் என்பது பெண்கள் இருவர் விளையாட்டாகக் கைகொட்டி நகைத்துப் பேசும் ஒரு பண்டைய விளையாட்டைக் குறிக்கும். எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களில் மேன்மையும் (பரத்துவம்) எளிமையும் குறிப்பிடத்தக்கன. இரு பெண்களின் நிலையை அடைந்து, ஏசிப் பேசுகிற ஒருத்தியின் பாசுரத்தால் எளிமைக் குணத்தையும், ஏத்திப் பேசுகிற மற்றொருத்தியின் பாசுரத்தால் மேன்மைக் குணத்தையும் திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் வெளிப்படுத்துகிறார். மாணிக்கவாசகரும் திருச்சாழல் என்னும் தலைப்பில் இருபது பாடல்களைப் பாடியுள்ளார்.

‘வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி கடல் வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே (உயர்வு)கலக்கியகை அசோதையார் கடைகயிற்றால் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய்! மாயமோ! மருட்கைத்தே (எளிமை).

இனித் திருமங்கையாழ்வாரின் ‘சாழல்’பாடல்களைக் காண்போம்.

தோழீ! நீ புகழும் பெருமான் மானை ஒத்த கண்களை உடையவளான சீதையைத் துணைவியாகக் கொண்டு கல் நிறைந்த வழியில் சென்று காடுகளில் வசித்தான் காண்!

என்று ஒருத்தி சொல்ல, மற்றொருத்தி அதற்குப் பதில் உரைக்கிறாள். தோழீ! கல் நிறைந்த வழியே சென்று காடுகளில் சஞ்சரித்த திருவடிகளானவை தேவர்களின் முடியில் அணியத்தக்க மலர்களாய் உள்ளன காண்!

தோழீ! வசுதேவனின் கால் விலங்கு கழலும்படி அவதரித்து திருவாய்ப்பாடியில் நந்தகோபரின் மகனாக வளர்ந்தானன்றோ?

தோழீ! இடைப்பிள்ளையாய் வளர்ந்தவன் நான்முகனுக்குத் தந்தை காண், அவன் என்னுடைய குலநாதன் காண்!

தோழீ! உலகிலுள்ள அனைவரும் ஏசும்படியாக இடைச்சேரியிலே இடைப் பெண்கள் சேமித்து வைத்த தயிரை உண்டான் அன்றோ?

தோழீ! ஆய்ச்சியர் வைத்திருந்த தயிரை உட்கொண்ட திருவயிறானது இவ்வுலகம் ஏழையும் அமுது செய்தபின்பும் இன்னமும் இடம் உடையதாய் இருக்கிறது. இது ஆச்சரியம்!

அவன் யசோதைப் பிராட்டியால் அடியுண்டு கயிற்றால் கட்டுண்டு கிடந்தான்; ஆயினும் தேவர்களுக்கும் அவன் நெஞ்சால் நினைப்பதற்கும் அரியவனாவான்.

பறை ஒலிக்க, பார்த்தவர் களிக்க மரக்கால் கூத்து ஆடியவன்; ஆயினும் தேவர்களுக்கும் என்றும் அடிமைப்பட்டவன்.

தூது சென்ற போது துரியோதனனால் இழிவான சொற்களைச் சொல்லப்பெற்றவன் அன்றோ? ஆயினும் உலகைப் பிரளயம் கொள்ளாதபடி திருவயிற்றில் வைத்துக் காத்தவன் காண்!

அருச்சுனனுக்குத் தேர் செலுத்தியவன்; ஆயினும் அரசர்களின் தலை மேல் வீற்றிருப்பவன் காண்!

மாவலியிடம் மண்ணை யாசித்தவன்; ஆயினும் விஷ்ணுவாய் எல்லா உலகிலும் மேம்பட்டவன் காண். அவன் திருப்பாற்கடலிலும் திருமலையிலும் உள்ளான் என்று சொல்கிறார்களே? ஆயினும் கலியனுடைய உள்ளத்தின் உள்ளே எளியனாய் உள்ளான்.

எம்பெருமானுக்குத் திவ்ய தேசங்களில் இருப்பதைக் காட்டிலும் மெய்யடியாருடைய இதய கமலத்தில் வாழ்வதே மிகவும் விருப்பமாகும் என்பதால், பெருமாள் குறித்த எசப்பாட்டும் எதிர்ப்பாட்டுமான விளையாட்டே திருச்சாழல்.

No comments:

Post a Comment