ஒரு மகரிஷி, எமலோகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தார். அவரது ஆவலை புரிந்து கொண்ட எமதர்மன், மகரிஷிக்கு அதற்கான அனுமதியைக் கொடுத்தார். மேலும் அவரை எமலோகத்தின் பல பகுதிகளையும் பார்த்தறியும் வகையில், சித்ரகுப்தனையும் துணையாக அனுப்பிவைத்தார். எமதர்மனின் கட்டளை என்பதால், சித்ரகுப்தன் அந்தப் பணியை சிரமேற்கொண்டு ஏற்றுக்கொண்டான். ரிஷியை அழைத்தபடி எமலோகத்தின் ஒவ்வொரு பகுதியையும் காண்பித்து, அது எதற்காக உருவாக்கப்பட்டது? அந்த இடத்தில் நடைபெறும் பணி என்ன? என்ன தவறு செய்தவர்கள் அங்கு வருவார்கள்? நன்மை புரிந்தவர்கள் எவ்விதம் மரியாதைக்குரியவர்களாக நடத்தப்படுகிறார்கள்? என்பதையெல்லாம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.
எமலோகத்தைப் பார்க்கப் பார்க்க வியப்பு மேலிட்டுக் கொண்டே இருந்தது. இப்படியொரு சிறப்பான இடத்தை எப்படி வடிக்க முடிந்தது என்பது பற்றியும், ஒவ்வொருவருக்கும் அவர்களின் தவறுகளுக்கு ஏற்ப, அணுவளவும் பிசகாமல் தண்டனை வழங்கப்பட்டு, அது செயல்படுத்தப்பட்டு வருவது பற்றியும் சிந்தித்து வியப்படைந்தார்.
எமலோகம் மிகவும் விசித்திர உலகமாக அவருக்குப் பட்டது. அங்கே நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் உண்டான காரணம், பாகுபாடற்ற, பாரபட்சமன்ற நீதி, நிலைநிறுத்தப்படும் தர்மம் அனைத்தையும் கண்டு மகரிஷியே ஒரு கணம் ஆச்சரியத்தில் வாயடைத்துத்தான் போனார். தண்டனைகளுக்கான காரணங்களில் அத்தனை துல்லியம். ‘இப்படி ஒரு நரகம் இருப்பது தெரிந்தும், ஏன் இந்த மனிதர்கள் பாவங்களைச் செய்கிறார்கள்?’ என்று நினைக்கும்போது அவருக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.
அந்த இடத்தில் மனிதர்கள் செய்த பாவங்களுக்காக கொடுக்கப்பட்ட கொடூர தண்டனைகளைப் பார்த்து, அந்த மகரிஷியின் மனம் சஞ்சலம் கொள்ளவில்லை. பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்ட, அனைத்தையும் கடந்த, சித்திகள் பல பெற்ற முனிவர் அல்லவா அவர்? ஒரு சில இடங்களில் தனக்கு ஏற்படும் சந்தேகங்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்காக அவ்வப்போது சித்ரகுப்தனைப் பார்ப்பார். அவரும், முனிவரின் சந்தேகக் குறிப்பை உணர்ந்தது போல, அனைத்தையும் விளக்கி தெளிவுபடுத்துவார்.
இப்படி ஒவ்வொரு இடமாக பார்த்துக் கொண்டிருந்தபோது, வழியில் ஓரிடத்தில் ஐந்து அடி உயரத்தில் கற்பாறை ஒன்று இருந்தது. அதைக் கண்ட முனிவர், ‘இது என்ன கற்பாறை?’ என்றார்.
சித்ரகுப்தனோ, ‘ஒன்றுமில்லை. மகாமுனி! ஒரு சிறுவன் செய்த பாவம்.. இப்படி வளர்ந்து நிற்கிறது’ என்று கூறினார்.
மேலும் அந்தக் கதையையும் அவர் சொல்லத் தொடங்கினார். ‘பூலோகத்தில் ஒரு முனிவரின் ஆசிரமத்துக்கு தினமும் பல அதிதிகள் (விருந்தினர்கள்) வந்து செல்வது வழக்கம். அவர்களுக்கெல்லாம், முனிவர் அன்புடன் உபசாரம் செய்து உணவு அளிப்பார். முனிவருக்கு ஒரு மகன் இருந்தான். சிறு பிள்ளையான அவன் மிகவும் சேட்டைக்காரன். எப்போதும் ஏதாவது ஒரு குறும்பு செய்து கொண்டே இருப்பான்.
அதிதியாக வருபவர்களுக்கு, முனிவர் அளிக்கும் உணவுகளில் சிறுசிறு கற்களைப் போட்டு, அவர்கள் சாப்பிடும் போது அடையும் கஷ்டத்தைக் கண்டு ரசிப்பான். அப்படி அவன் அதிதிகளுக்கு செய்த பாவமான அந்த கற்கள்தான், சிறுவன் வளர வளர சிறு பாறையாக இப்படி வளர்ந்து நிற்கிறது. அவனது விதி முடிந்து எமலோகத்துக்கு வரும் போது, இந்தப் பாறையை அவன் உண்ண வேண்டும். இதுதான் அவனுக்கான தண்டனை’ என்று சித்ரகுப்தன் விளக்கம் அளித்தார்.
அசந்து போனார் முனிவர். இருவரும் நடந்தார்கள். முனிவருக்கு அந்த சிறுவன் யார் என்று அறிந்துகொள்ள ஆர்வம். இதுபோன்ற ஒரு செயல் எங்கோ நடந்ததாகவும், அவரது மனதுக்குள் ஒரு நிழலாட்டம். சித்ரகுப்தனிடம் கேட்கவும் அவருக்குத் தயக்கமாக இருந்தது. எனவே தன் தவ வலிமையைக் கொண்டு, அந்த சிறுவன் யார் என்று ஞான திருஷ்டி யில் பார்த்தார். அந்த சிறுவன் வேறு யாருமல்ல. தற்போது எமலோகத்தை பார்வையிட வந்திருக்கும் தான்தான் என்பதை முனிவர் உணர்ந்து கொண்டார்.
நேராக எமதர்மனிடம் சென்றார். நடந்ததைச் சொன்னார்.
‘எமதர்மா! நான் முக்தியடைந்து, இறைவனின் அடியை சேர விரும்புகிறேன். அதற்கு இந்த கற்பாறை நிச்சயம் தடையாக இருக்கும். எனவே இந்த ஜென்மத்திலேயே அந்தப் பாவத்தைப் போக்க விரும்புகிறேன். நானே கொஞ்சம் கொஞ்சமாக இந்தக் கல்லைத் தின்று செரித்து விடுகிறேனே’ என்று கேட்டார் முனிவர்.
அவரது கோரிக்கையை எமதர்மன் ஏற்றார். கல்லை சிறிது சிறிதாக அரைத்து உண்டார் முனிவர். இதனால் அவருக்கு ‘சிலாதர்’ என்று பெயர் வந்தது. ‘சிலா’ என்றால் கல் என்று பொருள்.
எத்தனை சக்தி பெற்றவராக இருந்தாலும், எண்ணற்ற தவம், ஞானம் பெற்றவராக இருந்தாலும், ஒருவர் பிறருக்கு செய்யும் தீமை அவரை விட்டு விலகுவதில்லை. அவருக்கான தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அதை அனுபவித்தே தீர வேண்டும். அதுதான் கர்ம வினை.
இதை உணர்ந்த மனிதர்கள், எறும்புக்கும் கூட இன்னல் விளைவிக்க நினைக்க மாட்டார்கள்.
No comments:
Post a Comment