சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.
ஆனை முகனின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.
இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.
பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.
நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.
No comments:
Post a Comment