Saturday 1 July 2017

திருமண தடை நீக்கும் திரவுபதி அம்மன்


பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் நடுநாடு என்று அழைக்கப்படும் திருக்கோவிலூர் பகுதி வனத்திற்கும் வந்ததாக ஐதீகம் உண்டு. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சத்திரம் கிராமத்தில் முக்கால் அடி உயர திரவுபதி அம்மன் கற்சிலை ஒன்று கிடைத்ததாம். இதையறிந்த பாளையப்பட்டு ராஜா இங்கு சிறிய அளவில் கோயிலை கட்டியதாக கூறுகிறார்கள். புற்றுக்கு பால் சொரிந்த காராம்பசு இங்குள்ள குளத்தில் தண்ணீர் குடிக்கும்போது அதன் கால்தடம் குளக்கரை கல்லில் பதிந்துள்ளது. அந்த தடத்தை இப்போதும் காணலாம். ராஜாவால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த கோயில் பின்னர் நாளடைவில் புது பரிமாணம் எடுத்துள்ளது. 

மிருகண்ட ரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த கோயில் பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டது. கோயிலின் கருவறையில் நடுநாயகமாக நின்றகோலத்தில் திரவுபதி அம்மன் அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு வலதுபுறம் சுயம்புவாக தோன்றிய திரவுபதி அம்மன் சிலை (முக்கால்அடி உயரம்) உள்ளது. அதற்கு கீழே நடுவில் கிருஷ்ண பகவான், ஐம்பொன்னால் ஆன திரவுபதி அம்மன் மற்றும் வில், அம்புடன் காட்சியளிக்கும் அர்ஜூனன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். கருவறையின் வெளிப்புறம் வாசலின் இருபுறமும் துவார பாலகிகள் காவல் காக்கிறார்கள். கோயிலின் வெளிப்புறம் இடதுபுறம் விநாயகரும், அதையொட்டி சண்டிகேஸ்வரரும், வலதுபுறம் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். 

32 அடி உயர கொடிமரத்தின் வலதுபுறம் சிறிய சன்னதியில் முத்தால் ராவுத்தர் சிலை உள்ளது. பெரிய மீசையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் இவர்தான் திரவுபதி அம்மனின் பாதுகாவலர் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். முத்தால் ராவுத்தர் கோயில் அருகே காராம்பசு பால் சொரிந்த புற்று காணப்படுகிறது. கருவறை மண்டபத்தின் மேல் உள்ள பின்கோபுரம் 27 அடி உயரம் உள்ளது. நுழைவு வாயிலின் மேல்உள்ள முன்புற கோபுரம் 52 அடி உயரம் கொண்டது. 50 அடி உயர தேர் ஒன்றும் உள்ளது. தை மாதம் அமாவாசை விழா, புரட்டாசியில் அம்பு குத்தும் திருவிழா நடைபெறும். அதாவது ஆயுதபூஜைக்கு மறுநாள் (நவராத்திரி விழாவின் 10 வது நாள்) அம்பு போடுதல் விழா நடைபெறும். திரவுபதி அம்மனுக்கு சத்திரம் கிராமம் மட்டுமின்றி கீழ கொண்டூர் (எல்லை), மேலகொண்டூர், புத்தூர், ஏமப்பேர், அருமனை, பரனூர் உள்ளிட்ட 7 கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து விழா எடுக்கிறார்கள். 

தை அமாவாசை முடிந்து 13 வது நாளில் புனர்பூச திதியில் காப்பு கட்டுதல் நடைபெறும். தொடர்ந்து 8 நாட்கள் கழித்து 10 நாள் பிரம்மோற்சவம் தொடங்கும். பிரம்மோற்சவத்தின் 5 வது நாள் திருக்கல்யாணம் நடைபெறும். 8 வது நாள் அதாவது மகாசிவராத்திரிக்கு மறுநாள் ஏழு ஊர்களிலும் கரக உற்சவம் நடைபெறும். அதற்கு அடுத்தநாள் (9 வதுநாள்) அமாவாசை அன்று தேர் திருவிழா நடைபெறும். பின்னர் தீமிதி திருவிழா நடைபெறும். இந்த கோயிலில் அமாவாசை தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. தினமும் ஒருகால பூஜை (மாலையில்) நடைபெறுகிறது. 

திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் 9 வெள்ளிக்கிழமைகள் இங்கு வந்து அம்மனை மனமுருக வழிபட்டுச்சென்றால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் நோய்கொடுமை, கடன்தொல்லை, வழக்கு, தொழில்முடக்கம் போன்ற பிரச்னைகளும் தீரும் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.  திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சத்திரம் திரவுபதி அம்மன் கோயில். பஸ் வசதி உண்டு. 

No comments:

Post a Comment