Monday 10 July 2017

மகாலட்சுமி மகிமை

mahalakshmi க்கான பட முடிவு

விஷ்ணுவின் நெற்றியிலிருந்து தோன்றிய தாமரை மலரில் மகாலட்சுமி தோன்றினாள். பாரதம், மகாலட்சுமி கடலிலிருந்து தோன்றினாள் என்கிறது.
விஷ்ணு புராணம், விஷ்ணு தாமோத்தரம் ஆகியவற்றில் மகாலட்சுமி பிருகு மகரிஷிக்கு மகளாகப் பிறந்தாள் என்றும், அவர்தான் நாராயணனுக்கு அவளை திருமணம் செய்து வைத்தார் என்றும் குறிப்பிடுகிறது. மகாலட்சுமி பூமியின் செழிப்புக்குக் காரணமானவள் என்றும், அவளே தான்ய விருத்திக்கு அருள்பாலிப்பவள் என்றும் ஸ்ரீஸுக்தம் கூறுகிறது. இவளுக்கு தான்யலட்சுமி என்றும் பெயர்.
தூற்றப்படாத நெற்பொலிக்கு "ஸ்ரீதேவி' எனப் பெயருண்டு. நெற்பயிருக்கு "கிரிநாதன்' எனவும், நெல் பயிரிடுவதற்கு "கங்காதேவி' எனவும் பெயர் காணப்படுகிறது. செல்வத் தொடர்புடைய வைசியர்களுக்கு ஸ்ரீ என்ற அடைமொழியோடு (ஸ்ரீகுப்தன், ஸ்ரீபாலன் என்பன போல) உள்ள பெயர்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன.
புத்த ஜாதகக் கதைகளிலும் செல்வர்களான வணிகர்கள் மகாலட்சுமியை வழிபட்ட செய்தியும் ஸ்ரீ என்ற அடைமொழியோடு ஸ்ரீவர்த்தகன், ஸ்ரீதாசன் என்றாற் போல வழங்கப்பட்ட செய்தியையும் அறிகிறோம். விஷ்ணு புராணம், மகாலட்சுமியே விஷ்ணுவை விரும்பிச் சென்றடைந்ததாகக் கூறுகிறது. சில புராணங்களில் அவள் பிரம்மாவின் மகளாகவும் "தாதா' "விதாதா' ஆகியோரின் தாயாகவும் கூறப்படுகிறாள்.
சதபதத்தில் லட்சுமி பிரஜாபதியின் பெண்ணாகச் சொல்லப்படுகிறாள். விஷ்ணுவையும் லட்சுமியையும் இணைத்து விஷ்ணுவுக்கு ஸ்ரீபதி, ஸ்ரீநிவாஸ, ஸ்ரீதர முதலிய பல பெயர்கள் சொல்லப்படுகின்றன. "லக்ஷ்மீ' என்ற பெயரும் விஷ்ணுவுக்கு உண்டு.
லட்சுமி குபேரனுடைய அரச சபையில் எப்போதும் இருக்கிறாள் என்கிறது மகாபாரதம்.
மகிஷாசுரமர்த்தினி, மகாகாளி, ரோகிணி, விந்த்யா, வாஸினி, ரக்தந்தி, சாகம்பரி, துர்க்கா, பீமா என்ற பலவும் லட்சுமியின் தனி அவதாரங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.
விஷ்ணு புராணத்தில் ஓரிடத்தில் லட்சுமி, விஷ்ணுவை விட்டுப் பிரியாதவள் என்ற கருத்தும், மற்றோரிடத்தில் மாயையினால் தனியே பொன் உலோகமாக வடிவெடுத்து பகவானும் தானுமாக லட்சுமி இருக்கிறாள் என்ற கருத்தும் காணப்படுகின்றன. கிருத ஸுக்தத்தில் ஸ்ரீலட்சுமி ஒளபலா, அம்பிகா, சஷ்டி, ஜெயா, இந்திரசேனா என்பவர்களும், மூன்று சந்தியா காலங்களிலும் மூன்று விதமாக உபாசிக்கப்படும் காயத்ரியும் லட்சுமியின் அம்சம்தான் என்று வேதாந்த தேசிகர் குறிப்பிடுகிறார்.
சாத்வத சம்ஹிதையில் பகவான் "நான் அவளுக்கு ஆதாரமாக இருந்து வருகிறேன். எனினும் என்னுடைய சரீரம் அவளால் ஆகி அவள் உருவாக நிற்கிறது. அவளாலேயே எனக்குப் பெருமை வருகிறது' என்று குறிப்பிடுகிறார். சனத்குமார சம்ஹிதை பகவானுடைய கருணையை ஆக்கிரமித்த சக்திதான் மகாலட்சுமி என்றும், மகாலட்சுமியே எல்லா சக்திகளுக்கும் தலைவி என்றும் குறிப்பிடுகிறது.
பாற்கடலில் தோன்றிய லட்சுமிக்கு திக்கஜங்கள் அபிஷேகம் செய்ததை அடிப்படையாகக் கொண்டு மகாலட்சுமி தாமரைப்பூவில் இருக்க, இருபுறமும் இரண்டு யானைகள் அமைந்த கஜலட்சுமி உருவம் மிகப் பழமையான இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், நாணயங்களிலும் காணப்படுகிறது.
ஸ்ரீமத் பாகவதத்தில் மும்மூர்த்திகளில் மேம்பட்டவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஏனைய முனிவர்களால் அனுப்பப்பட்ட பிருகு முனிவர் மகாவிஷ்ணுவின் மார்பில் காலால் உதைக்கவே, அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாத மகாவிஷ்ணுவை விடுத்த, அவர் மார்பில் இருந்த லட்சுமி பிரிந்து சென்று விட்டதாகக் கதை சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கதை வேங்கடாசலபதி மஹாத்மியத்திலும் இடம் பெற்றுள்ளது.
அதாவது விஷ்ணுவின் மனதை லட்சுமி கோயிலாகக் கொண்டுள்ளாள் என்பதே இதன் தத்துவம். ஆசாரியர்கள், மகாவிஷ்ணுவின் மார்பில் லட்சுமியின் கால்களில் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் அடையாளம் இபுருப்பதால் அதைக் கொண்டே அவர் "லட்சுமிபதி'என்பதும், பரதேவதை என்பதும் முடிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment