திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு மலைப்பாதைகள் வழியாக திவ்ய தரிசன பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பக்தர்கள் நடந்து வருவதாலும், திவ்ய தரிசன பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காகவும் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திவ்ய தரிசன பக்தர்களுக்கு தரிசன அனுமதி சீட்டு வழங்குவது ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வாரத்தில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாட்களில் தினமும் அலிபிரி மலைப்பாதையில் நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு நள்ளிரவு 12.05 மணியில் இருந்து 15 ஆயிரம் பேருக்கு தரிசன அனுமதி சீட்டும், ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு காலை 6 மணியில் இருந்து 5 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்குமேல் நடந்து வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று ஏழுமலையானை வழிபடலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திவ்ய தரிசன பக்தர்களை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைத்து 1½ மணிநேரத்தில் சாமி தரிசனம் செய்து வைத்து கோவிலில் இருந்து வெளியே அனுப்பி வைக்கப்படுகின்றனர். திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்குவது குறைக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் கவலையில் உள்ளனர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாரத்தில் 3 நாட்களுக்கு திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மலைப்பாதைகளில் நடந்து வரும் பக்தர்கள் திருமலைக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது, தற்காலிகமாக நடைமுறையில் இருக்கும்.
திவ்ய தரிசன நடைமுறையில் ஏதேனும் மாற்றம் செய்வது தொடர்பாக பக்தர்களிடம் கருத்து கேட்கப்படும். பக்தர்கள், அதிகாரிகள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் வாரத்தில் 3 நாட்கள் தரிசன அனுமதி சீட்டு வழங்குவது நிறுத்தி வைத்திருப்பதை ரத்து செய்யலாமா அல்லது தற்போது உள்ள இதே நடைமுறையை பின் பற்றலாமா? என திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment